திண்டுக்கலில் இருந்து மதுரை செல்லும் தேசிய நான்கு வழி நெடுஞ்சாலையில் கலிக்கம்பட்டியை அடுத்து உள்ள தாபாவில் வடமாநில கனரக லாரிகள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை 12 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதுதவிர தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கனரக லாரிகள் மண் சாலையில் இறங்கும்போது பள்ளம் ஏற்பட்டு மழைநீர் மற்றும் கழிவுநீர்கள் குளம் போல் தேங்கி நிற்கின்றன. மீண்டும் லாரிகள் கிளம்பி செல்லும்போது லாரிகள் மூலம் சகதி மணல்கள் சாலைகளில் படிந்து விடுகின்றன.
இதனால் கலிக்கம்பட்டி தாபாவில் இருந்து செட்டியபட்டி முனியப்பன் கோவில் வரை சுமார் அரைக்கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளில் மணல் குவிந்து கிடப்பதால் இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் சகதி மற்றும் சாலையில் படிந்திருக்கும் மணல்களால் வழுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். அம்பாத்துரை காவல் நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் சாலையின் ஓரம் நிறுத்தப்படும் வெளிமாநில லாரிகளை அப்புறப்படுத்தி முறையாக தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.