2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற வாக்குச்சாவடி முகவர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அயராது உழைக்க வேண்டும் என்று சின்னாளபட்டி பேரூர் கழகம் சார்பாக ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிஎல்2, பிஎல்எசி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி பேசினார். கிளைக்கழகம் மற்றும் வார்டு செயலாளர் முதல் ஒன்றிய செயலாளர் வரை ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் மாபெரும் வெற்றி பெறலாம் என கூட்டத்தில் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி பேசினார். ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டி பேரூர் கழக தி. மு. க. பிஎல்2, பில்எசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஐஸ்வர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி, ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி ஆகியோர் கலந்துகொண்டனர். சின்னாளபட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத்தலைவர் ஆனந்திபாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னாளபட்டி திமுக பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.