சின்னூா்-கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைக்க பூமி பூஜை

73பார்த்தது
சின்னூா்-கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைக்க பூமி பூஜை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டாரத்தில் உள்ள வெள்ளக்கெவி ஊராட்சிக்குள்பட்டது சின்னூர் மலைக் கிராமம். இங்கிருந்து சோத்துப்பாறை வழியாக பெரியகுளத்துக்குச் சென்று வருவதற்கு கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில், சின்னூர்-கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கும், 1,200 மீட்டர் தொலைவு சிமென்ட் சாலை அமைப்பதற்கும் ஒருங்கிணைந்த ஒப்பந்தப்புள்ளி வருவாய் மூலக் கூறுகள் திட்டத்தின் கீழ், அரசு ரூ.7.14 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தப் பணிக்கான பூமி பூஜை பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இதில் திண்டுக்கல் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் திலவதி, வெள்ளக்கெவி ஊராட்சி மன்றத் தலைவர் புருஷோத்தமதாஸ், துணைத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், சட்டப் பேரவை உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் கூறியதாவது: மலைக் கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக சின்னூர்-கல்லாற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியும், இதையொட்டி சாலை அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. பெரியகுளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் விரைவில் அரசு சார்பில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி