தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கின் விசாரணைக்காக கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். முன்னதாக கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் இன்று சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுக் கிடப்பது நாடறிந்த விஷயம். நாடெங்கும் இன்று பல்வேறு பிரச்சினைகளை தமிழகத்தை ஆளும் திமுக அரசு சந்தித்துக் கொண்டிருக்கிறது. தன் ஆட்சிக் காலத்தில் தனது கட்சிக்காரர்களை அடக்கி வைக்காதது தான் இதற்கெல்லாம் காரணம். கட்சியிலும், ஆட்சியிலும் பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் தவறு செய்யும்போது அவர்களை தட்டிக் கேட்கிற அருகதை இல்லாதவராக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கு இல்லாமல் போய்விட்டது. அண்ணா பல்கலைக் கழக மாணவியின் பரிதாப நிலைக்குக் காரணமும் திமுக நிர்வாகிகள் தொடர்பு தான். இன்று, 'சார் யார்?' என்று பலரும் கேட்கும் நிலையில், அவர் யார் என்று ஆட்சியாளர்கள் வெளிப்படையாக சொல்லி விட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளோம். ஆட்சிக்கு, அதிகாரத்துக்கு எதிரான இந்தப் போர் தொடரும். இந்நிகழ்ச்சியின்போது, பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட பொதுச்செயலாளர் ஐஸ்வரியம் முருகன் வெங்கட்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.