நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டு முடிந்து 2025-ம் ஆண்டு தொடங்கும் ஆங்கில புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு ஒட்டி காவல் துறையினர் 800-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று இரவு தருமபுரி நகர் பகுதி முழுவதும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக காவல் துறையினரும் பொதுமக்களோடு இணைந்து புத்தாண்டை கேக் வெட்டி வரவேற்றனர்.
இதில் தருமபுரி நான்கு ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். எஸ். மகேஸ்வரன் தலைமையில், பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி, பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இரவு நேரத்தில் சாலையில் பயணித்த பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை காவல் துறையினர் பரிமாறி கொண்டனர்.