தர்மபுரி வி. ஜெட்டிஅள்ளியைச் சேர்ந்தவர் குமரவேல் மனைவி செண்பகவல்லி, இவர் வீட்டின் எதிரே வசிப்பவர் கமலேஸ்வரன். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். செண்பகவல்லி வீட்டின் முன்பு சாணம் தெளித்து, கோலம்போட்டு பூஜை பொருட்கள் வைத்து வணங்குவது வழக்கம். இதை பார்த்து வந்த எதிர்வீட்டை சேர்ந்த கமலேஸ்வரன், செண்பகவல்லி தங்களுக்கு செய்வினை வைப்பதாக நினைத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இரு குடும்பத்திற்கு முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2015 ஜூலை 10ம்தேதி இரு குடும்பத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கமலேஸ்வரன், செண்பகவல்லியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து தகவலறிந்த தர்மபுரி நகர காவலர்கள், கமலேஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று இறுதி விசாரணையில் நீதிபதி திருமகள், கமலேஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், 30 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.