தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலத்தில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். நேற்று நடைபெற்ற சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று நடந்த சந்தையில், 700ஆடுகள் மற்றும் 600 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், சுமார் ரூ. 52லட்சத்திற்கு ஆடுகளும், ரூ. 45லட்சத்திற்கு மாடுகளும் நாட்டுக்கோழி விற்பனை ரூ. 3லட்சத்திற்கு விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், கால்நடை வரத்து மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டதாகவும் நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.