தர்மபுரி நகராட்சியுடன், எ. ஜெட்டிஅள்ளி கிராம ஊராட்சியை, இணைப்பதாக அரசு தரப்பில் அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் எ. ஜெட்டிஅள்ளி ஊராட்சியை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணியாற்றி வரும் 2500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலை இழப்பு ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படும் என பெண் தொழிலாளர்கள் தரப்பில் கூறி, நேற்று ஒட்டப்பட்டி அவ்வைவழி சந்திப்பு சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு வழங்கினர். இதனை தொடர்ந்து இன்று எர்ரப்பட்டி பெருமாள் கோயில் வளாகத்தில், எ. ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற பெண் தலைவர் கவுரம்மாள் தலைமையில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி, எ. ஜெட்டிஅள்ளி கிராம ஊராட்சியை, தர்மபுரி நகராட்சியுடன் இணைப்பதை அரசு கைவிட வேண்டும் என தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கிராம சபை கூட்டம் கூட்டியிருந்தனர். இந்த கூட்டத்தில், அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் ஏ. ஜெட்டிஅள்ளி ஊராட்சியை, தருமபுரி நகராட்சியுடன் இணைப்பதை அரசு கைவிடக்கோரி தீர்மானம் நிறைவேற்றி, வரும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் தொழிலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.