தர்மபுரி: கால்நடை பராமரிப்புத்துறை சங்க ஐம்பெரும் விழா
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க ஐம்பெரும் விழா நேற்று (நவம்பர் 16) மாநில தலைவர் சங்கர் தலைமையில் தர்மபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏழு அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு உதவியாளர் பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நீதிமன்ற வழக்குகளைக் கவனிக்க சட்ட ஆலோசகர் பதவி உருவாக்க வேண்டும். நிறுத்திவைக்கப்பட்டுள்ள கால்நடை ஆய்வாளர் பயிற்சி உடனடியாக துவங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் சுல்தான் இக்ராகின் முன்னிலை வகித்தார். தர்மபுரி மாவட்டத் தலைவர் கோவர்தன் வரவேற்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் கார்த்திக் வரவு செலவு அறிக்கையை வாசித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.