வாகனங்களில் டீசல் திருட்டு.. சிசிடிவி காட்சி வைரல்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத டீசல் திருட்டு விற்பனை அதிகளவில் நடந்து வருகிறது. தனியாக செட் அமைத்து தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரி டிரைவர்களை சரிகட்டி அதிலிருந்து டீசல் திருடப்பட்டு கெமிக்கல் கலக்கப்பட்டு இரவு பகலாக சட்டவிரோதமாக விற்பனை நடந்து வருகிறது. சட்ட விரோத டீசல் விற்பனையை தடுக்க முயன்ற வருவாய் துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தேறியது. ஆனால் சட்டவிரோத டீசல் விற்பனை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் தற்போது லாரிகள் மற்றும் தனியார் பள்ளி வாகனங்களை குறி வைத்து நடந்து வரும் டீசல் திருட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று செப்டம்பர் 21 இரவு பாலக்கோடு சாலையில் நிறுத்தப்பட்ட பள்ளி வாகனங்களில் இருந்து நூற்றுக்கணக்கான டீசல் திருடப்பட்டு உள்ளது. காரில் வரும் மர்ம கும்பல், டீசலை ட்யூப் மூலம் கேன்களில் நிரப்பி காரில் எடுத்துச் செல்கின்றனர். இது தொடர்பான சிசிடிவி கேமரா பதிவுகள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பள்ளி வாகனங்களில் நடந்து வரும் தொடர் டீசல் திருட்டு குறித்து பள்ளி நிர்வாகம் காரிமங்கலம் காவல் நிலையத்தில் இன்று செப்டம்பர் 22 அளித்த புகாரின் பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.