தர்மபுரி ரோட்டரி சங்கம், ரோட்டரி மிட்டவுன் சங்கம் மற்றும் ரோட்டரி எலைட் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று மாலை தர்மபுரியில் நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரகுநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்துக்கு ரோட்டரி சங்கத் தலைவர் மாரியப்பன், ரோட்டரி மிட் டவுன் சங்கத் தலைவர் கணேஷ், ரோட்டரி எலைட் சங்கத் தலைவர் விஜய் சங்கரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
இந்த ஊர்வலத்தில் லஷ்மி நாராயணா மற்றும் வெங்கடேஸ்வரா கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டு போலியோ விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். இந்த ஊர்வலம் நேதாஜி பைபாஸ் ரோடு, அதியமான் பைபாஸ் ரோடு, 4 ரோடு மற்றும் கிருஷ்ணகிரி சாலை வழியாக ரோட்டரி அரங்கை வந்தடைந்தது. தொடர்ந்து ரோட்டரிஅரங்கத்தில் போலியோ நோய் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்க செயலாளர்கள் தென்னரசு, அன்பழகன், டாக்டர் மணிமாறன், சங்க பொருளாளர்கள் விஜய், அசோக்குமார், வித்யபூர்ணா மற்றும் முன்னாள் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்