தர்மபுரி மாவட்டத்தில் அரசு கேபிள் டி. வி. யில் 11 உள்ளூர் தனியார் சேனல்கள் செயல்பட்டு வந்தன. இவற்றில் ஒரு சேனலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஆபாச படம் ஓடியது. இதைத் தொடர்ந்து அந்த உள்ளூர் சேனலில் ஒளிபரப்பு நிறுத்தப் பட்டது. இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்ட அரசு கேபிள் டி. வி. தனி வட்டாட்சியர் ராஜராஜன், தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த உள்ளூர் தனியார் டி. வி. உரிமையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்டம் செலவடை கிராமத்தை சேர்ந்த சரபேஷ் ஆகியோருக்கு கேபிள் டி. வி. யில் ஆபாச படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து தனியார் டி. வி. சேனல் உரிமையாளர் பாலகிருஷ்ணன், சரபேஷ் ஆகிய 2 பேர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் தர்மபுரி நகர காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை நேற்று மாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.