தர்மபுரி: விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தயார்.. அதிகாரி தகவல்

74பார்த்தது
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தற்போது, விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் காரீப் பருவ சாகுபடிக்கு தேவையான உரங்களை தயார்படுத்தும் பணியில், வேளாண்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இது குறித்து தர்மபுரி மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) சித்ரா இன்று (ஜூன் 11) கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், தற்போது சாகுபடிக்கு தேவையான அடிப்படை உரங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில், போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா 1479 மெட்ரிக் டன், டிஏபி 298 மெட்ரிக் டன், பொட்டாஷ் 444 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 1087 மெட்ரிக் டன், டான்பெட் நிறுவனத்தில் பொட்டாஷ் 55 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 46 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 74 மெட்ரிக் டன், தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 4,867 மெட்ரிக் டன், டிஏபி 955 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1787 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5697 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 628 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

எனவே, விவசாயிகள் தேவைப்படும் உரங்களை பெற்று சாகுபடி செய்து பயன்பெறலாம். விவசாயிகள் உயிர் உரங்களை டிரோன் மூலம் தெளிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி