தர்மபுரி:
உலக சுற்றுலா தின விழா 2023-வினை முன்னிட்டு, சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இன்று (10. 10. 2023) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஐக்கிய நாட்டு சபையின் உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) செப்டம்பர் 27-ஆம் நாள் உலக சுற்றுலா தினமாக அறிவிக்கப்பட்டு, சுற்றுலாவின் சமூக, கலாச்சார,
அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இந்த ஆண்டு உலக சுற்றுலா தின விழா 2023-க்கான கருப்பொருளாக "Tourism & Green Investments" அறிவிக்கப்பட்டு, உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்துறை சார்பில் இந்தாண்டு தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடத்திட அனுமதித்து, ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவிற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 50 பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள அரசு ஆதி திராவிட பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகள் மற்றும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் என 50 மாணக்கர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து ஒருநாள் சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒருநாள் சுற்றுலா பயணத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அலுவலக செயல்முறைகள் குறித்தும், வங்கிகளில் நடைபெறும் அலுவல் செயல்முறைகள் குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு காண்பிக்கப்பட உள்ளது. மேலும், அருங்காட்சியகங்கள், நினைவிடங்கள், முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவற்றை மாணவ, மாணவியர்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவியர்களிடம் உரையாடி, வடிவியல் பெட்டியினை (Geometry Box) வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பழங்குடியினர் நல அலுவலர் பி. எஸ். கண்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் பா. கதிரேசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.