தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது தர்மபுரி பிடமனேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பர்கத் அலி மனைவி முபாரக் ஜான், அவரது மாமியார் மக்புல் ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில், தர்மபுரி நகரில் திருப்பத்தூர் மெயின் ரோடு, டேக்கிஸ்பேட்டையில் ஒரு பெண்ணும் அவரது மகனும் இணைந்து நடத்தும் ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ரூ. 1 லட்சம், ரூ. 2 லட்சம், ரூ. 5 லட்சம் என பல்வேறு சீட்டு குரூப்புகளில் சேர்ந்து மாதந்தோறும் தவறாமல் பணம் கட்டி வந்துள்ளோம். பணம் சேமிப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து நாங்கள் அவர்களிடம் சீட்டு போட்டு வந்துள்ளோம்.
தவணை முடிந்த பிறகும் அதற்கான மொத்த தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். அவ்வாறு எங்களுக்கு வரவேண்டிய மொத்த தொகை ரூ. 81 லட்சம் சீட்டு பணத்தை தராமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வந்தனர். நாங்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், அடியாட்களை கொண்டு எங்களை மிரட்டுகிறார்கள். இப்போது பணம் தர முடியாது என்று எங்களை மிரட்டுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் பணம் மோசடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.