தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று (மார்ச் 30) மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளுக்கு மத்திய அரசு அதற்குரிய தொகையை வழங்காததால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் நாளை செவ்வாய்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஒன்றிய தலைவர்களின் போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகம் தேவைப்படுகிறது என தெரிவித்தார். மேலும், என்கவுண்டர் என்பது தவிர்க்கப்பட வேண்டும், இதனால் உளவுத்துறை கண்காணிப்பை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.