தர்மபுரி நல்லம்பள்ளி வட்டம், ஏ. ஜெட்டிஅள்ளி திட்ட பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் விற்பனை செய்யப்பட்டு கிரயம் பெற்றுள்ள உரிமையாளர்கள் பட்டா மாற்றம் செய்து கொள்ளாமல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பெயரிலேயே இருந்து வந்ததால், வீட்டுமனைகளை கிரயம் பெற்றுள்ள உரிமையாளர்கள் தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சிறப்பு முகாம் இன்றைய தினம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.
கிரயம் பெற்றுள்ள உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள கிரய பத்திரம், வில்லங்க சான்று மற்றும் உரிய ஆவணங்களுடன் இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு, பட்டா மாற்றம் செய்திட மனுக்கள் பெறப்பட்டது. இச்சிறப்பு முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிரயம் பெற்றுள்ள உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று, பட்டா மாற்றதல் பெற மனு அளித்துள்ளனர். இச்சிறப்பு முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடு பணிகளையும், பயனாளிகளின் ஆவணங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், சரிபார்த்து, ஆய்வு மேற்கொண்டார். மேலும், இச்சிறப்பு முகாமில் பங்கேற்றுள்ளவர்களுக்கு ஆவணங்கள் சரியாக இருப்பின் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டா வழங்குவதற்கான உரிய பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.