தமிழக அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட 13 தொடக்கபள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் நகராட்சி மூலம் சமையலறைகள் ஒதுக்கப்பட்டு துவக்கப்பள்ளியில் பயின்று வரும் 728 பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கு 180 கிராம் முதல் 200 கிராம் வரை உணவு மற்றும் 50 கிராம் அளவிற்கு சாம்பாரும் தயாரித்து வழங்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உணவு பொருட்கள் வைக்கப்படும் அறையை ஆய்வு செய்தார். அதில் காலாவதியான ஆயில், உப்பு, ரவை உள்ளிட்டவை இருந்ததை கண்டுபிடித்த மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உணவு தயாரிக்கும் ஒப்பந்ததாரரின் சூப்பர்வைசரை அழைத்த மாவட்ட ஆட்சியர் இதுபோன்று காலாவதியான உணவுப் பொருட்களை வைத்து உணவு தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் சமையல் செய்யும் இடங்கள் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் எனவும், மேற்கூரையின் மீது இருந்து பெயிண்டுகள் விழும் நிலையில் உள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு தூய்மையாகவும் சுத்தமாகவும் சுகாதாரத்துடன் உணவை வழங்க வேண்டும். இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.