தர்மபுரி நகராட்சி ஆணையாளர் இரா. சேகர் கூறியதாவது, தர்மபுரி நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ. 29. 50 கோடி ஆகும். சொத்துவரி, தொழில்வரி, காலிமனை வரி, நகராட்சி கடைகளின் வாடகை, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை திட்ட இணைப்பு கட்டணம் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு பெரிய அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. மொத்தம் ரூ. 29. 50 கோடியில் இது வரை ரூ. 16 கோடி வரி நிலுவையில் உள்ளது. இந்த வரிகளை வசூலிக்க காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நகராட்சி ஆணையாளர் முதல் நகராட்சி அலுவலக உதவியாளர் வரை அனைவரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
தர்மபுரி நகராட்சியில் நிலுவையில் உள்ள ரூ. 16 கோடி வரி பாக்கியை வருகிற 31-ம் தேதிக்குள் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகள் பல லட்சம் நிலுவை வைத்துள்ள நிலையில், அதனை வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. வரி வசூலிப்பு மூலம் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பொது மக்களுக்கு அடிப்படை நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. திட்டப் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு வசதியாக பொதுமக்கள் தாங்களாகவே வரி இனங்களை உடனே செலுத்த முன்வர வேண்டும். மேலும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.