தர்மபுரி மாவட்டத்த்தில் செயற்கை நிறமூட்டிகள் தர்பூசணி பழங்களில் சேர்க்கப்பட்டுள்ளனவா கண்டறிந்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், ஐ. ஏ. எஸ். , உணவு பாதுகாப்பு துறையினருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ. பானுசுஜாதா, தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி, சரண்குமார், அருண், திருப்பதி உள்ளிட்ட குழுவினர் தர்மபுரி நகராட்சி பகுதியில் சந்தை பேட்டையில் உள்ள மொத்த விற்பனை நிலையங்கள், விளையாட்டு அரங்கம் எதிரில் ஒட்டப்பட்டி, எர்ரப்பட்டி, தேவரசம்பட்டி, உள்ளிட்ட பகுதியில் சாலை ஓரங்களில் கொட்டி குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள், பழ விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் சந்தைப் பேட்டையில் நகராட்சி பள்ளி அருகே பழங்கள் பூஞ்சை மற்றும் அழுகும் நிலையில் இருந்த இரண்டு மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையம் என 3 இடங்களில் இருந்து சுமார் 500கிலோ அளவிலான தர்பூசணி பழங்களும், ஒரு சிக்கன் கடையில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் 2லிட்டர் அப்புறப்படுத்தப்பட்டது. எர்ரப்பட்டி பகுதியில் சாலை ஒரம் வைக்கப்பட்டிருந்த மொத்த விற்பனை பழக்கடையில் பெரும்பாலான பழங்கள் பூஞ்சை பாதிப்பு 1200 கிலோ அளவிலான தர்பூசணி பழங்கள் அப்புறப்படுத்தப்பட்டது.