தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் சேகர் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் மாதையன் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார். தர்மபுரி நகரில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் தூர்வார வேண்டும். அவ்வாறு தூர்வாரப்படும் மண் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்.
நகரில் பெருகிவரும் கொசு தொல்லையை கட்டுப்படுத்த அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
தர்மபுரி நகரில் ரூ. 1. 50 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்த சாலைகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் என மொத்தம் ரூ. 2. 50 கோடி மதிப்பில் திட்ட பணிகள் மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதேபோன்று தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளில் தலா ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.