பண்ருட்டி அருகே ஏ. ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 69) விவசாயி. இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் இருவரும் சொந்த
வேலை காரணமாக நேற்று பகல் 12 மணி அளவில் கடலூருக்கு சென்றனர். பின்னர் அங்கு
வேலை முடிந்ததும் மீண்டும் 3 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ. 70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ராமலிங்கம் தனது மனைவியுடன் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.