குமராட்சி அருகே சிலை கண்டெடுப்பு

62பார்த்தது
குமராட்சி அருகே சிலை கண்டெடுப்பு
கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் முள்ளங்குடி கிராமம் அமைந்துள்ளது. நேற்று காலை இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது கல்லால் செய்யப்பட்ட சுமார் 3 அடி உயரம் கொண்ட தலை பகுதி இல்லாத அம்மன் சிலை மற்றும் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன பலிபீடம் ஒன்று ஆற்றுக்குள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மேற்கண்ட சிலைகளை கைப்பற்றி அங்குள்ள கோவில் வளாகத்தில் வைத்தனர். பின்னர் அவர்கள் இது பற்றி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், குமராட்சி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கிராமநிர்வாக அலுவலர் ராஜேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளிடம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 2 கற் சிலைகளையும் வாகனத்தில் ஏற்றிச் சென்று காட்டுமன்னார்கோவில் தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கொள்ளிடம் ஆற்றில் கிடந்த கற் சிலைகள் எங்கிருந்து அடித்து வரப்பட்டது என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளிடம் ஆற்றில் கல்லால் ஆன அம்மன் சிலை, பலிபீடம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி