திருப்பூரைச் சேர்ந்த சுதர்சன் (26) மற்றும் நவீன் (22) ஆகிய இரு நண்பர்கள், வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர். நேற்று சுற்றுலா முடித்து திரும்பும் வழியில், தாய்முடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சுதர்சனின் பெற்றோரைப் பார்க்கச் சென்றுள்ளனர். மீண்டும் திருப்பூர் செல்லும் வழியில், தங்கள் இருசக்கர வாகனத்தில் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த அரசு பேருந்தில் மோதிக்கொண்டனர்.
இந்த விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சுதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த நவீன் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காடம்பாறை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வால்பாறை மலைப்பாதையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.