கோவையைச் சேர்ந்த கல்லூரி பெண் ஊழியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று ஒளிந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மழை காரணமாக இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
பன்னிமடையைச் சேர்ந்த நாகலட்சுமி, நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்றுள்ளார். நேற்று பெய்த மழையின் காரணமாக தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் அருகே நிறுத்தியுள்ளார்.
பின்னர், வெளியே செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அவிநாசி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார்சைக்கிளின் இருக்கையைத் திறந்தபோது, பச்சை நிறத்தில் நீளமான ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பெட்ரோல் பங்க் ஊழியர் பாம்பு என்று சத்தமிடவே, நாகலட்சுமி மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். இருக்கைக்குள் ஒளிந்திருந்த பாம்பு தானாக வெளியேறி, பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஊர்ந்து சென்று அருகிலுள்ள காலி இடத்திற்குள் மறைந்துவிட்டது.
நாகலட்சுமியின் வீட்டின் அருகே காலி இடங்கள் உள்ளன. சமீபத்திய மழையின் காரணமாக, அந்த காலி இடங்களில் இருந்து பாம்பு வெப்பத்திற்காக மோட்டார்சைக்கிள் மீது ஏறி இருக்கைக்கு அடியில் பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.