வால்பாறை பகுதியில் பெய்த கனமழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 98 அடியைத் தாண்டி கிடுகிடுவென உயர்ந்தது. தென்மேற்கு பருவமழை வரவிருக்கும் நாட்களில் பெய்ய வாய்ப்புள்ளதால், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சோலையாறு மின் உற்பத்தி நிலையம்-1 நேற்று முதல் மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியது. இம்மையம் ஒரு மணி நேரத்திற்கு 44 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. மின் உற்பத்திக்குப் பிறகு வெளியாகும் 214 கன அடி நீர் பரம்பிக்குளம் அணைக்குச் செல்கிறது.