மேட்டுப்பாளையம் சிராஜ் நகர் பகுதியில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து 5 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர், மேட்டுப்பாளையம் சிராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த கெளவுஸ் மைதீன் (47), ரவி (47), வீரன் @ ஆண்டிச்சாமி (47), கிருஷ்ணகுமார் (36), குமார் (45) ஆகிய 5 பேர் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்த 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 5 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.