கோவையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணை தற்போது கோடைகாலத்திலேயே நிரம்பி, தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக அணை நிரம்பினால் குளித்து மகிழச் செல்லும் பொதுமக்கள், தற்போது ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். பொதுப்பணித் துறையினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு கருதி பொதுமக்களை அணைப்பகுதிக்கு அனுமதிக்க மறுப்பதே இதற்கு காரணம். இதற்கிடையில், சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் நொய்யல் ஆற்றில் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் மீன் பிடித்து விளையாடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்த போதிலும், சிறுவர்கள் தொடர்ந்து ஆற்றில் விளையாடி வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, சிறுவர்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.