கோவை, வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஸ்ரீதர் என்பவரின் 10 வயது மகன், அவரது கார் ஓட்டுநரான நவீனால் கடத்தப்பட்டார். 20 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த நவீன், சிறுவனை டியூஷனுக்கு அழைத்துச் சென்று திரும்ப அழைத்து வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று சிறுவனை கடத்திச் சென்ற நவீன், ஸ்ரீதரிடம் ரூ. 25 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தார். இதற்கு முன், ஸ்ரீதரிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் ரூ. 12 லட்சம் முதலீடு செய்திருந்த நவீன், அந்தப் பணத்தைத் திரும்பக் கேட்டபோது கொடுக்காததால், சிறுவனைக் கடத்தியதாக விசாரணையில் தெரியவந்தது.
துடியலூர் காவல் நிலையத்தில் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில், தனிப்படை அமைத்து தேடிய போலீசார், நவீன் ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் பதுங்கியிருந்ததைக் கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர். சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.