பேரூர்: பொய் பரப்புரை வேண்டாம்- முத்தரசனுக்கு ஈஷா கண்டனம்
கோவையில் நேற்று (17/11/2024) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈஷா குறித்து உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசனுக்கு ஈஷா அறக்கட்டளை கண்டனங்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்களுக்கான அழகு ஒன்று கூந்தல் அழகு என்று முத்தரசன் அவர்கள் கூறியிருக்கிறார். ஒரு கம்யூனிஸ்ட் சித்தாந்த அரசியல் தலைவரிடம் இருந்து இப்படியான பிற்போக்கு சிந்தனைகள் வெளிவருவது மிகவும் துரதிஷ்டவசமானது. பெண்களின் அழகு கூந்தலில் இல்லை. குடும்பம், சமுதாயம், சித்தாந்தம், மதம் உள்ளிட்ட காரணிகளின் கட்டாயங்கள் ஏதும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கையை சுயமாக அவர்களின் விருப்பத்தின் பேரில் தேர்ந்தெடுப்பதில் இருக்கிறது என தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை நேரடியாகவோ அல்லது ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள், அரசின் நேரடி கள ஆய்வு அறிக்கைகள் என பொதுவெளியில் எளிதில் கிடைக்கும் அரசு ஆவணங்களை கூட தேடி படிக்காமல், உண்மையை அறிந்து கொள்ளும் விருப்பமும் இல்லாமல், ஏதோவொரு கட்டாய நிர்பந்தத்தின் பேரில், யாரோ சிலர் எழுதிக் கொடுத்த அவதூறுகளை முத்தரசன் அவர்கள் ஊடகங்களுக்கு முன் படித்து காட்டியது முதிர்ச்சியான அரசியல் போக்கு இல்லை. ஆகவே பொய்யான அவதூறு கருத்துக்களை முத்தரசன் பரப்ப வேண்டாம் என ஈஷா அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது.