கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2016 முதல் 2018 வரை கணினி மற்றும் உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் முன்னாள் துணைவேந்தர் கணபதி, முன்னாள் பதிவாளர்கள் மோகன், வனிதா, முன்னாள் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் விடாமல் தனித்தனியாக உபகரணங்கள் வாங்கியதில் 85 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. கூட்டு சதி, மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, பணி நியமன ஆணைகள் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் கணபதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.