கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி(76). இவர் ஓய்வு பெற்ற முன்னாள் மின் அதிகாரி. ரங்கசாமி தனது மனைவியுடன் நேற்று முன்தினம் (நவம்பர் 27) தொட்டிப்பாளையம் பகுதியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (நவம்பர் 28) வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ரங்கசாமிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி வீட்டிற்கு வந்து பார்க்கும்போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடு போனது தெரிய வந்துள்ளது. உடனே ரங்கசாமி இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்துகொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.