மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ. 110 கோடி செலவில் இந்த சிலை கட்டப்பட உள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் 7-வது படை வீடாகக் கருதப்படுகிறது. தினசரி அதிகமான பக்தர்கள் வருவதால், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சிலை அமைக்கும் குழுவில் அறநிலையத்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். மருதமலை பஸ்நிலையம் அருகே 3 ஏக்கர் நிலத்தில் இந்த சிற்பம் அமைக்கப்படவுள்ளது. 39 அடி உயர பீடத்தில் நிறுவப்படும் இந்த சிலையின் முன் பிரமாண்ட வேலும் அமைக்கப்படும். அதேபோல், அறுபடை வீடுகளுக்குச் சமமான சன்னிதிகள் மற்றும் மயில் சிலைகளும் சுற்றுவட்டத்தில் உருவாக்கப்படும். மேலும், மருதமலை அடிவாரத்தில் 8 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ்நிலையம், வாகனநிலையம், தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படும். பக்தர்களுக்காக கோவிலுக்கு நேரடி பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.