மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளைப்பூண்டு விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வெள்ளைப்பூண்டு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் நீலகிரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரக்கூடிய வெள்ளைப்பூண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளாவிற்கும் இங்கிருந்து வெள்ளைப்பூண்டு அனுப்பப்பட்டு வருகின்றது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெள்ளைப்பூண்டு சீசன் தொடங்கியுள்ளதால், மேட்டுப்பாளையம் மார்க்கெட்டிற்கு அதிக அளவில் வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 40 ஆயிரம் மூட்டை வரை வெள்ளைப்பூண்டு விற்பனைக்கு வந்துள்ளது. வரத்து அதிகரித்ததால் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, உரித்த பெரிய பூண்டுகள் ஒரு கிலோ ரூபாய் 15-க்கும், நடுத்தர வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூபாய் 50 முதல் ரூபாய் 60 வரையும், தர வெள்ளைப்பூண்டு ரூபாய் 35 முதல் ரூபாய் 100 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளைப்பூண்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், வெள்ளைப்பூண்டு கமிஷன் மண்டி உரிமையாளர்களும் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை என்று இன்று கூறியுள்ளனர்.