கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே காளிமங்கலம் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண்கள் சாவித்திரி, விஜயா, மங்கலம் மற்றும் கண்ணம்மா ஆகியோர் வளர்த்து வந்த 40-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று வழக்கம்போல் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆடுகளை மேய்த்துவிட்டு திரும்பிய ஆடுகள், கிராமத்திலுள்ள வாழைத் தோட்டத்தில் பாய்ச்சப்பட்டிருந்த நீரைப் பருகிய சிறிது நேரத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தன.
விசாரணையில், வாழைத் தோட்டத்தின் விளைச்சலுக்காக உரக் கரைசல் தண்ணீரில் கலந்து விடப்பட்டிருந்தது தெரியவந்தது. தாகத்தில் இருந்த ஆடுகள் அந்த நீரைப் பருகியதே உயிரிழப்புக்குக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. உயிரிழந்த ஆடுகளின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டு புதைக்கப்பட்டன.
இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை வாங்கிப் பெருக்கி, அடுத்த மாதம் பக்ரீத் பண்டிகைக்கு விற்பனை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த இழப்பு அவர்களுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மனிதாபிமான அடிப்படையில் தமிழக அரசாங்கம் இப்பழங்குடி பெண்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.