கோவை மாவட்டம், சூலூர் அடுத்த அரசூர்-வெள்ளாளப்பட்டி சாலையில், டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள பாக்கு தோப்பில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க வடமாநில ஆண் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். கொலை செய்யப்பட்டவரின் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. தடயவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தேவையான தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்து சூலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.