கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் நேற்று மாலை கத்தியுடன் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த ஒரு வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணம்பாளையம் பகுதியில் போதையில் கத்தியுடன் நடமாடிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் (30) என்பவரை அப்பகுதி மக்கள் பிடித்து, தர்ம அடி கொடுத்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். நேற்று மாலை சுமார் 3 மணியளவில் கண்ணம்பாளையத்தில் போதையில் கத்தியுடன் நடமாடிய உதயகுமாரை பொதுமக்கள் விசாரித்தபோது, அவர் கேள்வி கேட்டவர்களைத் தாக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரிடம் கத்தி இருந்ததைக் கண்ட பொதுமக்கள், அதிர்ச்சியடைந்து அவரது கைகால்களைக் கட்டி வைத்து மேலும் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உதயகுமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் என்பது தெரியவந்தது.
உதயகுமாரிடம் இருந்து கத்தியைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கண்ணம்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.