கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு, மின் கட்டண சுமை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறியாளர்கள் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சுமார் 2. 5 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் வி. எம். சி. மனோகர் தலைமையில் வந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொழிலாளர்களின் கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாக தெரிவித்தனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசைத்தறியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. கூட்டணிக் கட்சியாக இருந்தாலும், தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. எனவே, தமிழக அரசு உடனடியாக ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.