சூலூரை அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 11 ஏக்கர் நிலத்தில் சுமார் 6000 சதுர அடியில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இக்கட்டிடத்தின் அஸ்திவாரத்திற்கு ஆற்று மணல் அல்லது எம். சாண்ட் மணலுக்கு பதிலாக பவுண்டரி மண் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, கட்டிட அஸ்திவாரங்களுக்கு ஆற்று மணல் அல்லது எம். சாண்ட் மணல் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், பீடம்பள்ளியில் கட்டப்படும் இக்கட்டிடத்திற்கு பவுண்டரி மணலை கொட்டி, அதன் மேல் செம்மண் பரப்பி, பின்னர் ஜல்லி மற்றும் சிமெண்ட் கொண்டு தளம் அமைப்பதாக தெரிகிறது.
பவுண்டரி மண் பயன்படுத்துவதால் அருகிலுள்ள விவசாய நிலங்களின் மண் தரம் மாசுபட்டு, விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தனர். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். பவுண்டரி மண் பயன்பாடு தொடர்பான சர்ச்சை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.