மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு வழங்கக் கோரி போராடி வரும் விசைத்தறியாளர்களுக்கு ஆதரவாக, நேற்று கோவை புறநகர் பகுதிகளில் முழு கடையடைப்பு அனுசரிக்கப்பட்டது. இதனால் இப்பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கடந்த 15 மாதங்களாக கூலி உயர்வுக்காக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 16 முறை பேச்சுவார்த்தைகள், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள், கருப்புக்கொடி ஏற்றுதல், மாவட்ட ஆட்சியர்களுடனான பேச்சுவார்த்தைகள் என பல முயற்சிகள் எடுத்தும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்க மறுத்து வருகின்றனர்.
இதையடுத்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் முடிவின்படி, கடந்த மார்ச் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்றது. மேலும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, கருமத்தம்பட்டியில் 5 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் விசைத்தறியாளர்கள் நடத்தினர். இந்நிலையில், விசைத்தறியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சோமனூர், சாமளாபுரம், காரணம்பேட்டை, கருமத்தம்பட்டி, தெக்கலூர் ஆகிய புறநகர் பகுதிகளில் மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.