சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி - சோமனூர் சாலையில் சிக்னல் கம்பம் மீது லாரி மோதியதில் கம்பம் சாய்ந்து சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கருமத்தம்பட்டி-சோமனூர் சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் நேற்று டேங்கர் லாரி ஒன்றில் டீசல் இறக்கப்பட்டுள்ளது. டீசலை இறக்கிய பிறகு, லாரியை ஓட்டுநர் பெட்ரோல் பங்கிற்கு வெளியே சாலையை நோக்கி நிறுத்திவிட்டு, லாரி சக்கரங்களுக்கு கல் வைக்காமல் வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு, நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரி திடீரென சாலையை நோக்கி நகர்ந்துள்ளது. அப்போது அங்கிருந்த சிக்னல் கம்பத்தின் மீது மோதி, மீண்டும் பழைய நிலைக்குச் சென்று மீண்டும் கம்பத்தின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் சிக்னல் கம்பம் சாய்ந்துவிட்டது. லாரி சாலையை நோக்கி நகரும்போதும், சிக்னல் கம்பம் சாய்ந்தபோதும் அந்த வழியாக எந்த வாகனங்களும், பொதுமக்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும், சிக்னல் கம்பம் சாய்ந்ததால் கருமத்தம்பட்டி-சோமனூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடனடியாக கிரேன் உதவியுடன் சாய்ந்த சிக்னல் கம்பத்தை அகற்றி போக்குவரத்தைச் சீர் செய்தனர்.