கோவை: மகள் வீட்டுக்கு வந்த முதியவர் ஏணியில் இருந்து விழுந்து பலி
மயிலாடுதுறை மாவட்டம் வல்லகைரம் அமுதம் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன்(67). இவரது மனைவி பிருந்தா(64). இவர்களின் மூத்த மகள் கோவை வடவள்ளி ஐஓபி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சந்திரசேகரன் தனது மனைவியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்தார். சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்த ஏணியில் ஏறியபோது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (நவம்பர் 9) உயிரிழந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.