கோவை அரசு மருத்துவமனையில் நிலுவைத் தொகை, ஊதியம் வேண்டி ஒரு நாள் பணிகளைப் புறக்கணித்து ஒப்பந்த பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அரசு மருத்துவமனையில், கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், நீலகிரி, ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள் மற்றும் வெளி நோயாளிகள் என ஆயிரக் கணக்கான சிகிச்சை பெற்று வருகின்றன.
நாள்தோறும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த மருத்துவமனையில் நூற்றுக் கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் தூய்மை பணி, காவல் பணி போன்ற பணிகளில் நிரந்தர பணியாளர்கள் உடன் ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிலுவைத் தொகை, ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கவில்லை என்றும், இதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பும் ஒப்பந்த பணியாளர்களை எவ்வித அறிவிப்புமின்றி பணியில் இருந்து நீக்குவதாக மருத்துவமனை அதிரடி முடிவு எடுக்கிறது.
இதனைக் கண்டிக்கும் விதமாக நேற்று (ஜூன் 6) கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அறை முன்பு 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகத்தினர் ஜூலை 7-ஆம் தேதி வழங்கவதாக கூறினர். இதையடுத்து போராட்டத்தை நிறுத்தி ஒப்பந்த பணியாளர்கள் கலைந்து சென்றனர்.