இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ. ஆர். சி. டி. சி) கோவையில் இருந்து காசி, அயோத்தி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்கு சிறப்பு விமானச் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து ஐ. ஆர். சி. டி. சி மண்டல இணை பொதுச்செயலாளர் சாம் ஜோசப் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 5 இரவு, 6 பகல் கொண்ட இந்த ஆன்மிகச் சுற்றுலா ஜூலை 23-ஆம் தேதி கோவையில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சுற்றுலாவில், காசி விஸ்வநாதர் ஆலயம், அன்னபூரணி ஆலயம், காசி விசாலாட்சி ஆலயம், கால பைரவர் ஆலயம், சாரநாத், கங்கா ஆர்த்தி, அலகாபாத் திரிவேணி சங்கமம், பாதாள அனுமன் ஆலயம், அலகாபாத் கோட்டை, அயோத்தி புதிய ராமர் கோவில், புத்தகயாவில் உள்ள புத்தர் சிலை மற்றும் மகாபோதி ஆலயம், கயாவில் உள்ள விஷ்ணு பாத ஆலயம் போன்ற முக்கிய ஆன்மிகத் தலங்களை தரிசிக்கலாம்.ஐ. ஆர். சி. டி. சி பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு ரயில் மற்றும் விமானச் சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.