தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்விக்குத் தனி ஆசிரியர்கள் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்ததும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் உறுதி அளித்தார். சூலூர் அருகே சிந்தாமணி புதூரில் நேற்று நடைபெற்ற விளையாட்டு சாதனையாளர் விருது விழா 2025-ல் அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவில், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி துறைகளில் சாதனை படைத்தவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். விழாவில் பேசும்போது, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 66% பள்ளிகளில் மட்டுமே விளையாட்டு மைதானங்கள் உள்ளன. ஆரம்பப் பள்ளிகளில் 4% பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளில் 15% பள்ளிகளிலும் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். 2026-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஒவ்வொரு பள்ளிகளிலும் உடற்கல்விக்கென தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார். இந்த விழாவில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.