கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திறந்தவெளிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்கும் வகையில் நகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நகராட்சி தலைவர் நித்யா ஜி. மனோகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட திறந்தவெளி பகுதிகளில், சாலையோரங்களில் குப்பை கொட்டும் வாகனங்கள் மற்றும் நபர்களை புகைப்படம் எடுத்து உரிய ஆதாரத்துடன் 9629964466 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புபவர்களுக்கு வேன் மற்றும் ஆட்டோவாக இருந்தால் ரொக்கப் பரிசு ரூ. 2500/-மும், இருசக்கர வாகனமாக இருந்தால் ரொக்கப் பரிசு ரூ. 500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் நகராட்சியின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது. இதுபோன்று குப்பைக் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் நகராட்சி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவது குறையும் என்று தெரிவித்துள்ளனர்.