கோவை அருகே 23 ஆண்டுகளுக்குப் பிறகு நூற்றாண்டு பழமைவாய்ந்த மாகாளியம்மன், முனியப்பன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த வரப்பாளையம் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அருள்மிகு மாகாளியம்மன், முனியப்பன், பட்டத்தரசி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழா 23 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பூச்சாட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நேற்று முனியப்பனுக்கு மாவிளக்கு ஊர்வலத்துடன் தொடங்கிய திருவிழாவில் இரவு பன்றி பலியிடுதல் நிகழ்வுடன் கிராம சாந்தி நடைபெற்றது. இதனிடையே மாகாளியம்மனுக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பல்வேறு சமுதாய மக்கள் வாழ்ந்து வரும் வரப்பாளையம் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து நடத்தும் மாவிளக்கு திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உருமி மேள தாளத்துடன் நூற்றுக்கணக்கான பெண்கள் கைகளில் மாவிளக்கு ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று மாகாளியம்மனை வழிபட்டனர். முன்னதாக மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மாகாளியம்மன் பொதுமக்கள் மனமுருகி வேண்டினர்.