கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் 100 புதிய அரசு பேருந்துகளை இயக்கத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2024-25ஆம் ஆண்டில் கோவைக்கு மொத்தம் 321 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும், தற்போது 100 பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் விடியல் பயணப்பேருந்துகள் மற்றும் புறநகர் சேவைக்கான பேருந்துகள் அடங்கும். மேலும், 2025-26ம் ஆண்டில் கூடுதலாக 252 பேருந்துகள் கோவைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார். சென்னை போல் கோவைக்கும் மின் (EV) பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதற்கான 500 பேருந்துகளுக்கான டெண்டர் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மின்சாரக் கட்டண உயர்வால் ஏழை மக்கள் மற்றும் சிறு தொழில்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலதிபர்களின் கவலையை கருத்தில் கொண்டு தேவையான தீர்வுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார். பொதுமக்கள் மற்றும் பேருந்து ஊழியர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதுடன், தவறு செய்தவர்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.