சீட் கிடைக்காததால் பெண் பயணி போராட்டம் -கைது செய்த காவல்துறை

69பார்த்தது
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து தனியார், அரசு பஸ்கள் கோவைக்கு இயக்கப்படுகின்றன. நேற்று திங்கள் கிழமை என்பதால், பஸ்களில் கூட்ட நெரிசல் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில், கோவைக்கு செல்லும் ஜெய் என்கிற தனியார் பஸ்சில், பெண் பயணி ஒருவர் ஏறினார். பஸ்சில் அமர்ந்திருந்த பயணியை தள்ளி உட்காருமாறு கூறியதாகவும், அதற்கு அந்த பயணி, ஆள் வருவார்கள், கீழே சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த அந்த பெண், பஸ் டிரைவர், கண்டக்டரிடம் இது குறித்து தெரிவித்து இடம் வழங்க கூறினார். அதற்கு அவர்கள், சீட்டில் உட்கார ஆள் வரும் என்றால் நாங்கள் என்ன செய்வது, என கூறியுள்ளனர். இதனால், பஸ் ஊழியர்கள் - பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பெண்ணும், அவரது சகோதரரும், பஸ் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, தனியார் பஸ் டிரைவர்கள், அந்த பஸ் ஊழியர்களுக்கு ஆதரவாக பஸ்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு எஸ். ஐ. க்கள் கவுதம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், தனியார் பஸ் ஊழியர்களிடம் பேச்சு நடத்தி பஸ் இயக்க அறிவுறுத்தினர். அதன்பின், அந்த பெண் பயணி, அவரது சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி