பொள்ளாச்சி நேதாஜி ரோடு முத்தப்பா கவுண்டர் காம்பவுண்ட் பகுதியில் உள்ள பழக்குடோனில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டன் கணக்கான பழங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. முகம்மது மன்சூர் மற்றும் அவரது தம்பி முகம்மது இஷாக் ஆகியோருக்கு சொந்தமான இந்த பழக்குடோன் குமரன் நகர் கள்ளுக்குழி மேடு பகுதியில் அமைந்துள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் குடோனில் தீப்பிடித்ததை அடுத்து, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
உடனடியாக அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கடையில் இருந்த பழப்பெட்டிகள் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து போராடியதன் விளைவாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் குடோன் முழுவதும் எரிந்து நாசமானதுடன், அருகில் இருந்த மரத்திலும் லேசாக தீப்பற்றியது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் அந்த மரத்திற்கும் நீர் ஊற்றி தீயை அணைத்தனர்.